Memory

அமரர் பிரேமச்சந்திரா ஐயா அவர்களும் மலையக சிறுவர் இல்லமும்.

அன்புடையீர், 

அமரர் பிரேமச்சந்திரா ஐயா அவர்களும் மலையக சிறுவர் இல்லமும்.

தானும் தன் குடும்பமும் தன்நலமும் என்று வாழும் பலரிடையே, நாமும் நம் சமூகமும் என்று வாழும் சிலரையே காண்கின்றோம். சமூகத்தின் மீது ஐயா அவர்கள்கொண்ட பிரமத்தின் அளவினை அவர் வாழ்ந்த காலத்தில் சமூகத்துக்கு செய்த சேவைகள் பறைசாற்றுகின்றது.

அமரர் பிரேமச்சந்திரன் ஐயா அவர்கள் இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினராக லண்டன் மாநகரில் கனகதுர்க்கை அம்பாளுக்கு ஆலயம் அமைத்து ஈழத்தில் பல்வேறு சமூக சமுதாய சேவைகளை முன்னெடுப்பதற்கு அன்று அவர் முன்னின்று உழைத்தார் என்றால் மிகையாகாது. சைவத்தையும், சைவசமய, சித்தாந்தங்களையும், அதனுடைய பாரம்பரியங்களையும் உலகத்துக்கு பறைசாற்றும் ஒரு மாபெரும் ஆலயமாக இன்று இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் திகழ்கின்றது.

இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் நிர்வாக சபை தலைவர் சொ. கருணைலிங்கம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் மலையக சிறுவர் இல்லம் 2001 ஆம் ஆண்டு பதுளையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு நிர்வாக மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை அமரர் பிரேமச்சந்திரன் ஐயா அவர்களே சுமார் இரண்டு ஆண்டுகளாக பரிதவித்த எம்மை நிலைநிறுத்தி இல்ல குழந்தைகளின் தேவைகளை குறை நிரப்பினார்கள் என்றால் மிகையாகாது. மலையக இல்லத்திற்கான அனைத்து இணைப்பு செயற்பாடுகளையும் ஐயா அவர்களே பூர்த்தி செய்ததுடன், மலையக வாழ் உறவுகளுக்கு இலண்டன் தொப்புள்கொடி சொந்தங்கள் மூலம் கை கொடுக்கக்கூடிய பல்வேறு விதமான முனைப்புகளிலும் ஈடுபட்டார் என்றால் அதுவே உண்மை.

ஒவ்வொரு தைத்திருநாள், தீபாவளி, சித்திரை புதுவருட பண்டிகைகளுக்கும் இல்ல குழந்தைகளுக்கு ஒரேவிதமான ஆடைகளை தைத்து, அணிவித்து அந்த மழலைகளின் முகங்களில் மகிழ்ச்சியை கண்டவர் ஐயா ஆவார். தேடித் தேடித் தெரிந்தெடுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டுப் பொருட்கள், புத்தகம், வர்ண பூச்சிகள் என சிறுவர்கள் மனமறிந்து இவை அனைத்து குழந்தைகளையும் தான் பெற்றெடுத்த குழந்தைகளாகவே பராமரித்தார் என்றே கூறலாம்.

இல்லத்தில் பல ஆண்டுகள் வளர்ந்து கதிர்காமத்திற்கு மணமகளாக சென்ற மதுபாஷினியின் திருமண படங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பியதும் மணமக்களுக்கு உடனடியாக வாழ்த்துச் செய்தியுடன் பெரும்தொகையான பணமும் அனுப்பி வைத்திருந்தார். “அடுத்த தடவை வந்ததும் கதிர்காமத்திற்கு சென்று அவர்களைப் பார்த்து வருவோம்” என்று கூறிய ஞாபகம் வந்து செல்கின்றது.

பல மணி நேர உரையாடல் எமக்கு வாடிக்கையானது அதில் அவருடைய ஒவ்வொரு ஆழமான கருத்தாடல்களும், அறிவுரைகளும் ஒரு சிற்பியாக அவர் என்னையும் செதுக்கினார் என்றே கூறலாம்.

இலவசமாக ஆரம்பிக்கப்பட்ட கணினி பயிற்சி கூடம் தொடர்ந்தும் இலவசமாகவே தொடர்வதற்கு உதவி ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டேன், அதிக லாபம் என்பதிலிருந்து விடுபட்டு பொருத்தமான கட்டணத்தை பெற்று பெறப்படுகின்ற வருமானத்தில் இல்லாதவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்கி செய்யலாமா என்று கேட்டார். ஆரம்பத்தில் நானும் மறுத்தேன். ஆனால் இன்று 25,000 மேற்பட்ட ஊவா வாழ் மலையக மைந்தர்களை கணனி அறிவு திறன் சார்ந்தவர்களாக அமரர் பிரேமச்சந்திரன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலே, முக்கியமானதாக இருந்தது எனலாம்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளிலும் அவர் ஆற்றிய பணிகள் கண்டு வியந்துள்ளேன். சைவநெறிக் கூடத்தின் மூலமான பணிகள். பொருளாதார மேம்பாட்டுக்கான உதவித் திட்டங்கள். அனர்த்த கால நிவாரண உதவிகள். வறிய குடும்பங்களுக்கான உடைகள்.

மண்சரிவு, வெள்ளம் என எவ்வாறான இடர் நிலைமைகள் மலையகத்தில் ஏற்பட்டாலும் அது தொடர்பாக உடனடியாக சில வேளைகளில் நாம் தொடர்பு கொள்ளும் முன்பாக அவரே முன்வந்து எம்மை தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டும், எவ்வாறான உதவிகள் அவர்களுக்கு தேவை, எத்தனை குடும்பங்கள் அங்கு இருக்கின்றன, எத்தனை குழந்தைகள் அங்கு இருக்கின்றன எனக் கேட்டு அறிந்து அதற்கு ஆவன செய்யுமாறு பணிப்பார். இதில் மீரியபெத்த மண்சரிவு தொடர்பிலான மீட்புப் பணிகள் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகளை ஐயா அவர்களின் பூர்ண ஒத்துழைப்பும் உதவிகள் சுமார் இருபது நாட்களுக்கும் அதிகமாக எம்மால் அம்மக்களுக்கு கைகொடுக்க கிடைத்தமை என்றும் நாம் மறக்கமுடியாத ஒன்று.

சிலோன் டீ எனும் பெயர் மூலம் உலகுக்கு இலங்கையை அறிமுகப்படுத்திய மலையக மக்கள் இன்றும் முகவரியற்ற சமூககமாகவே காணப்படுகின்றனர் என்றால் அதுவே உண்மை, அதுபோலவே இலங்கையில் சிறுவர் இல்லங்கள் என்று பலநூறு இருக்கின்றது அனுசரணை களும் வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமாகவே சில இடங்களில் கொட்டிக் கிடக்கின்றது.

இதில் மலையக சிறுவர் இல்லம் ஏனோ சரியான முறையில் இனம் காணப்படாமல் முகவரி மறக்கப்பட்டு அன்றைக்கு 15 ஆண்டுகளாக ஒரு நிரந்தர கட்டிடம் என்றேன் வாடகை வீடுகளில் மலையக சிறுவர்களும் நடத்தப்பட்டு வந்த காலப்பகுதியில், அவரை பிரேமச்சந்திரன் ஐயா அவர்களின் பூரண தலையீட்டின் மூலமாக நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான இடம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு தேவையானால் அரைவாசிப் பணம் இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், எஞ்சியதை எமது பங்களிப்புடன் காணி வாங்கப்பட்டடது.

எதிர்காலத்தை முன்னரே அறிந்தவராய் தன்னைத் தொடர்ந்து லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை என்னுடனான தொடர்புகளுக்கு கௌரவத்துக்குரிய டாக்டர் பரமநாதன் ஐயா அவர்களையும் அறிமுகம் செய்து அதன்மூலம் இன்று கௌரவ ஸ்ரீரங்கன் ஐயா, கௌரவ கருணைலிங்கம் ஐயா என்ன அறக்கட்டளை உறுப்பினர்கள் நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவரும் கைகோர்த்து பிரேமச்சந்திரன் ஐயா அவர்களின் மலையக இல்லம் தொடர்பான இறுதி ஆசையின் படிஇன்று கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.

அமரர் பிரேமச்சந்திரன் ஐயா அவர்களின் வாழ்நாளில் அவரால் இயன்றவரை முழுமூச்சுடன் எம்முடன் இரண்டறக் கலந்து, எமது நிர்வாகத்துக்கும், எமது குழந்தைகளுக்கும், அந்தக் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கும் ஒரு நல்வழிகாட்டியாக இருந்தார்.

அவர் உயிர் உடலை விட்டு பிரிந்து இருந்தாலும் அவர் என்றும் எம்முடன் மலையக சிறுவர் இல்லத்தில் எம்முடன் வாழ்கிறார் என்பது எங்களுடைய நம்பிக்கையாகும்.

ஓம் சாந்தி.

நன்றி

30.07.2021.

கே. காண்டீபன்,
இணைப்பாளர் – மலையக சிறுவர் இல்லம்,
இயக்குனர்- சமூக உதவி ஸ்தாபனம்,
இல. 45, மஹியங்கனை வீதி, 
பதுளை. 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.