Activity, Charity, Uncategorized

அமரர் திரு சி. பிரேமச்சந்திரா அவர்களும் உலக சைவப் பேரவையுடனான அவரின் ஈடுபாடும்

காலத்துக்குக் காலம் உலக சைவப் பேரவை அதன் அனைத்துலக மாநாடுகளை வெவ்வேறு நாடுகளில் நடாத்தி வருகின்றது. சில மாநாடுகளில் தமிழ் மொழியிலே வணங்குவதின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

1992 இல் சிதம்பரத்தில் நடைபெற்ற மாநாட்டில் இத்தகைய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதனை அறிந்த திரு பிரேமச்சந்திரா மகிழ்ச்சி அடைந்தார். உலக சைவ.பேரவையின் முக்கிய உறுப்பினரான அவரின் சகோதரர் திரு க. கணேசலிங்கம் மூலம் இவரும் பேரவையில் சேர்ந்து அதன் சட்டங்களையும் செயற்பாடடையும் பின்பற்றினார். இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தினதும் உலக சைவ பேரவையினதும்; தலைவரான சுவாமி சிவநந்தி அடிகளாரையும் சந்தித்தார்.

இதிலிருந்து உலக சைவ பேரவையின் தலைவருடன் சேர்ந்து பேரவைக்காக உழைத்தார். சைவம் அன்னிய சக்திகளால் அழிவுறாது வளர வேண்டுமென்பது அவரின் பெரு விருப்பமாக இருந்தது. உலக சைவ பேரவையின் இலண்டன் கிளையின் பொருளாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து உலக சைவ பேரவையின். பிரசுரங்களை எடுத்து பலருக்கு விநியோகித்தார். ‘சைவ உலகம்’ ஒரு இரு மொழிப் பிரசுரம். பல வேளைகளில் அவரே இவற்றுக்கான பொருட் செலவை ஏற்றுள்ளார். ‘சைவ உலகம்’ சஞ்சிகை கலாநிதி கோபாலகிருணனின் உதவியுடன் சென்னையில் அச்சிடப்பட்ட்து.

தமது சமயத்திலிருந்தும் சைவ வழியிலிருந்தும் சிலர் விலகிச் செல்ல கூடும் என்பதால், தமது தாய் நாடுகளுக்கு வெளியே வாழும் தமிழ் மாணவர்களுக்கு சைவப் பரீட்சைகளை ஒழுங்கு செய்து ஊக்கமளித்தார்.

1998 இல் இருந்து, சைவ வழி நடப்பவரும் பலர் அறிந்த சைவ ஆசிரியருமான திரு மனோகரனுடன் சேர்ந்து, இலண்டனில் பல சைவப் பயிற்சி மையங்களை நடத்த முனைந்தார். பல மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து, அவர்கள் தமது பழம்பெரும் சமயமான சைவத்தை அறியவும் அதில் ஆர்வம் கொள்ளவும் உதவினார்.
2001 நவம்பர் 03 ஆம் திகதி அன்று உலக சைவ பேரவையின் 10 ஆவது மாநாடு இலண்டன் ஈலிங்கிலுள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில், சுவாமி சிவநந்தி அடிகளார் தலைமயில் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் முக்கிய அமைப்பாளராக செயற்படடவர் திரு பிரேமச்சந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.