Memory

எனது கணவர் அமரர்.திரு.பிரேமச்சந்திரா பற்றிய நினைவுப் பதிவுகள்

அமரர் திரு.பிரேமசந்திரா அவர்கள் இலங்கையின் வட பகுதியில் செழிப்பு மிக்க மயிலட்டிக் கிராமத்தில் கண்ணியமாக வாழ்கை நடாந்திய ஆசிரியர்களான காலஞ் சென்ற சிவகுரு செல்லம்மா தம்பதிகள் இரண்டாவது மகன் ஆவார். பாடசாலை படிப்பை நிறைவு செய்த பின்னர் பிரேமசந்திரா அவர்கள் கல்கமுவா தொழிநுட்பக் கல்லூரியில் மேலும் தொடர்ந்து முறையாக பயிற்சி பெற்ற பின் கொழும்பு சீதுவையில் அமைந்திருந்த பாரிய வீடமைப்பு திட்டத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

அவர் திருமண வயதை அடைந்த பின்னர் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்கஇ காலம் சென்ற சரவணமுத்து அழகரெத்தினம் அவர்களுடைய புதல்வியான என்னை பெரியவர்களின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். எமது வாழ்கை கொழும்பில் மிக சந்தோசமாகவும், அமைதியாகவும் நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வாறாக மகிழ்சியான எமது வாழ்வில் 1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர் என்ற ஒரே அடையாளத்தினால் எமது சேமிப்புகளை இழந்து சில நண்பர்களின் உதவியுடன் கப்பல் மூலம் பயணம் செய்து யாழ்பாணத்திற்கு வந்து சேர்ந்தோம்.

எமது சொந்த ஊரில் ஓரளவு சுதாரித்துக் கொண்ட பின் யாழ் வைத்தியசாலை கட்டட நிர்மாணப் பணியில் இணைந்து திரு.பிரேமசந்திரா வேலை செய்து கொண்டிருக்கும் காலங்களில் இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்பாணத்தின் குடியேறிய இந்திய இராணுவத்தினர் அடாவடிதனமான செயல்களால் மீண்டும் நாம் கொழும்புக்குச் சென்றோம்.

கொழும்பு தலைமைச்செயலகம், மட்டக்களப்பு , வாழைச்சேனை போன்ற இடங்களில் மாறி மாறி வேலை செய்து சோர்வடைந்த வேளையில் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த எனது சகோதரியின் ஆலோசனைப்படி ஒரு நிலையான வாழ்வைத்தேடி லண்டன் வந்து சேர்ந்தோம்.

இலண்டனில் எமது முயற்சியினாலும் சுயதொழில் ஆர்வத்தினாலும் ஒரு வியாபார நிறுவனத்தை ஆரம்பித்து சில வருடங்கள் நடத்தி வந்தோம். எனது கணவருக்கு home office civil service  இல் வேலை கிடைத்தால் அந்த வியாபார நிறுவனத்தை விற்றுவிட்டு தனது இறுதிக்காலம் வரை பிரேமசந்திரா home office இல் கடமையாற்றினர்.

மேற்கு லண்டனில் சைவ ஆலயம் இல்லாத குறையினை தீர்க்கும் முகமாக எனது கணவரும் வேறுசில அன்பர்களும் ஒன்றும் சேர்ந்தியங்கி 1991 ஆம் ஆண்டளவில் ஆலயத்திற்கான கால் கோள் விழாவினை Harrow  வில் முன்னெடுத்தனர். கலை நிகழ்ச்சிகள் மூலமும் பொது மக்களின் அங்கத்துவப் பணமூலமும் வேறு பல வழிகள் மூலமும் நிதி திரட்டப்பட்டு 1995ம் ஆண்டு அம்மனுக்கு நிரந்தர ஆலயம் இப்பகுதியில் அமைக்கப்பட்டது.

ஆலயம் அமைத்த முயற்சியில் எனது கணவர் திரு.பிரேமசந்திராவின் பங்களிப்பு அளப்பரியது. அத்துடன் நின்று விடாது இவர் கனக துர்கை அம்மன் கோயிலில் ஒரு தரமான நூலகம் அமைய வேண்டும் என்பதன் முக்கியத்தை உணர்ந்து செயல்பட்டார். ஆலயப்பணியில் ஈடுபட்ட இன்னொரு அங்கத்துவருடன் இணைந்து பல தோத்திரத் திரட்டுகள் சைவசமயம் சார்ந்த புத்தகங்கள்இ இறுவெட்டுகள் (CDs) போன்றவற்றை இந்தியாவின் தமிழகத்தில் இருந்து தருவித்து ஆலய நூலகத்தினை நிறைவானதாக்கி பெருமகிழ்ச்சி கண்டவர். தொடர்ந்து லண்டன் ஸ்ரீ கனக துர்கை அம்மன் ஆலயத்தின் ஆரம்பகால தர்மகத்தாக்கலில் ஒருவராக மக்கள் சேவையே மகேசன் சேவையெனும் நோக்கத்துடன் செயல்பட்டு வந்தார்.

ஈழத்தில் குறிப்பாக வன்னிப் பிரதேசங்களில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இன அழிப்பின் விளைவாகப் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்கங்களுக்கும் ஆன உதவிகளை வழங்குவதில் எனது கணவர் கூடிய சிரத்தை எடுத்து ஆலய நிர்வாகத்தினருக்கு அதனை வெளிப்படுத்தினார். அவரது இத்தகைய அறப்பணிச் சித்தனைகள் ஆலயத்தின் தர்மகர்த்தாக்கள் சிலரினால் அங்கீகரிக்கப்பட்டது தடுக்கப்பட்பாலும் கூட அவற்றினை பொருட்படுத்தாது தனது சேவையினைத் தொடர்ந்து தர்மத்தையும் நியாத்தையும் நிலை நாட்டுவதற்காக தர்மகர்த்தா சபையில் போராடும் நிலைமை ஏற்பட்ட போதும் அவர் மனம் தளரவில்லை.

ஸ்ரீ கனக துர்கை அம்மனின் பணி மட்டுமன்றி சைவக் கோவில்களில் தமிழில் அரச்சனைகள் வழிபாடுகள் நடைபெற வேண்டும் என்ற எண்ணக்கருத்தும் அவரிடம் வேர் விட்டு வளர்ந்து அதற்கான வழிகளையும் தேடிவந்தார்.

திரு.பிரேமசந்திராவின் எண்ணக்கருத்துகள் இன்று நிஜமாகி செயல் வடிவம் பெற்று சுவிற்சலாந்தின் இரு சைவக்கோவில்கள் (ஞானலிங்கேஸ்வர்) யாழ்பாணம் இனுவில் ஞானலிங்கேஸ்வர் திருகோவில் லண்டன் உச்சி முருகன் கோவில் ஆகியவற்றில் அர்ச்சனைகள் வழிபாடுகள் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

ஈழத்தின் வன்னி மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களில் அல்லுறும் எமது தமிழ் உறவுகளின் வாழ்வு மேம்படுவதற்காக லண்டன் சைவநெறிக் கூடம் எனும் அறக்கட்டளை மூலம் தன்னாலான உதவிகளை தளராமல் முன்னின்று செய்து வந்தார்.

சுத்த மனதோடு எல்லோரும் திருப்தியாக நிம்மதியாக வாழவேண்டும் என்ற விருப்பில் பல நற்பணிகளை ஆற்றிவந்த எனது கணவர் தி.பிரேமச்சந்திரா அவர்கள் ஆண்டவனின் மடியில் அமைதியாக உறங்க அவரது சேவைகள் தொடர்ந்து பலனளிக்க என்னாலான முயற்சிகளை செய்வதற்கு அம்மன் அருள் வேண்டி நிற்கிறேன்.

திருமதி.வசந்தாதேவி பிரேமசந்திரா

 

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.